அட்லீ இயக்கத்தில் ஒன்றாக இணையும் விஜய் – ஜூனியர் என்.டி.ஆர்?

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார் நடிகர் விஜய். பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம், ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. திரையரங்கில் வெளியான இப்படம் 16 நாட்கள் கழித்து, ஓடிடி-யில் வெளியானது. இதையடுத்து நெல்சன் திலிப்குமார் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இதற்கிடையே விஜய் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அதோடு ‘தளபதி 65’ படத்தில், நடிகர் மகேஷ் பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.

இப்படியான செய்திகள் சில காலமாக நடந்து கொண்டிருக்கையில், சமீபத்திய செய்தியின் படி, ஒரு படத்தில் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இரண்டு நட்சத்திரங்களும் ஒரு படத்திற்காக இணையக்கூடும் என்றும் இயக்குநர் அட்லீ இப்படத்தை இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. இது நடந்தால், தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அட்லீயின் ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு இது நான்காவது விஜய் – அட்லீ படமாக இருக்கும்.

இந்த படம் ‘தளபதி 67’ ஆக இருக்கக்கூடும் எனவும் 2022-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. ‘தளபதி 66’ பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.

சுவாரஸ்யமாக, முன்னதாக 2019-ஆம் ஆண்டில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் தளபதி விஜய்யின் ரசிகர்கள், இருவரில் சிறந்த நடனக் கலைஞர் யார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் செய்தனர். இந்நிலையில் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஒன்றாக இணைந்து நடனமாடுவது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்!