‘தளபதி 65’ பற்றி டெலிட் செய்யப்பட்ட ட்வீட் – சோஷியல் மீடியாவில் கவனம் பெறும் பதிவு!

‘தளபதி 65’ படம் குறித்து ட்வீட் செய்து பின்னர் டெலிட் செய்யப்பட்ட பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்திருக்கும் நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்தின் மூலம் அவர் 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தின் பாடலுக்கு நடனம் அமைக்கும் ஒத்திகை ஏபரல் 24-ம் தேதி தொடங்க இருப்பதாகவும் பாடல் படப்பிடிப்பு மே 3ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்க இருப்பதாகவும் ட்வீட் செய்து பின்னர் அதை நீக்கினார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த புட்டபொம்மா பாடல் மற்றும் பிரபுதேவாவுடன் பணியாற்றிய ரவுடி பேபி பாடல் ஆகியவை மாபெரும் வெற்றிப்பாடலாக அமைந்தது. ஏராளமான தெலுங்கு, இந்திப் படங்களில் பணியாற்றியிருக்கும் இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்திலும் இணைந்துள்ளார்.