தெலுங்கில் ‘மாஸ்டர்’ வெற்றியடைந்ததை முன்னிட்டு, விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் விநியோகஸ்தர்.

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வந்த படங்களில் மாஸ்டர் படமும் ஒன்று.

தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது ‘மாஸ்டர்’. இதில் தமிழைத் தவிர்த்து இதர மொழிகளில் முதல் வாரத்திலேயே போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டது. இதனால் விநியோகஸ்தர்கள் அனைவருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் வரும் வாரம் அனைவருமே லாபத்தை ஈட்டிவிடுவார்கள் எனத் தெரிகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு உரிமையை மகேஷ் கொனேரு வாங்கி வெளியிட்டார். லாபமடைந்ததை முன்னிட்டு இன்று (ஜனவரி 21) சென்னை வந்து படக்குழுவினரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் விஜய்யைச் சந்தித்துப் பேசியது குறித்து மகேஷ் கொனேரு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இப்போதுதான் தளபதி விஜய் அவர்களைச் சந்தித்து ஒட்டு மொத்த ஈஸ்ட் கோஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் குழு, மாஸ்டர் தெலுங்கு பதிப்பின் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் சார்பாக நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலங்களில் திரைப்பட ரசிகர்களால் காட்டப்பட்டிருக்கும் அன்பைப் பார்த்து விஜய் சார் மகிழ்ச்சியடைந்துள்ளார். தெலுங்கு ரசிகர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார். மாஸ்டர் தெலுங்கு பதிப்பை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி செவன் ஸ்க்ரீன் லலித் மற்றும் ஜெகதீஷ்”

இவ்வாறு மகேஷ் கொனேரு தெரிவித்துள்ளார்.